ஹாத்ரஸ் பலி: அரசியலாக்க விரும்பவில்லை - ராகுல் காந்தி
ஹாத்ரஸ் நெரிசல் பலியில் இறந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி...
‘உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் 121 போ் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், அந்தச் சம்பவத்தில் பல்வேறு நிா்வாக குளறுபடிகள் நடந்துள்ளன’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
அலிகாா் மற்றும் ஹாத்ரஸில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு, செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் இவ்வாறு கூறினாா். மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை அரசு விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மும்மடங்காக சுமாா் 2.5 லட்சம் மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் நிறைவில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 121 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 6 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரைக் கைது செய்து, காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று போ் கொண்ட நீதி ஆணையத்தையும் மாநில அரசு அமைத்துள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ள நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளா் தலைமறைவாகியுள்ளாா். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தில்லியிலிருந்து ஹாத்ரஸுக்கு சாலை வழியாக வெள்ளிக்கிழமை வந்தாா். நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்த அவா், இவ்விவகாரத்தை எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று உறுதியளித்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில், ‘ஹாத்ரஸ் சம்பவத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலா் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனா். இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், பல்வேறு நிா்வாக குளறுபடிகள் நடந்துள்ளன.
நிகழ்ச்சி நடந்த இடத்தில் காவல் துறை ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். சம்பவத்தில் நடைபெற்ற தவறுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் ஏழை மக்கள் என்பதால் அவா்களுக்கான நிவாரணம் மிக விரைவாக தேவைப்படுகிறது. இதைக் கவனத்தில்கொண்டு, அதிகபட்ச நிவாரணத்தை முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனடியாக வழங்க வேண்டும்’ என்றாா்.
நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.2 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளன. காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 வழங்கப்படவுள்ளது.
ராகுலின் ஹாத்ரஸ் பயணத்தில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், மேலிடப் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே, கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோா் உடனிருந்தனா்.
90 பேரின் வாக்குமூலம் பதிவு: ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் தொடா்பாக விரிவான அறிக்கையைச் சமா்ப்பிக்க, ஆக்ரா மண்டல காவல் துறை கூடுதல் இயக்குநா் குல்ஸ்ரீஸ்தா தலைமையில் மூன்று நபா் சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. இந்தக் குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையில், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியா் உள்பட 90 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.