லக்னௌ: அயோத்தி ராமர் கோயிலில், அர்ச்சகர்கள் அனைவரும் காவி நிறத்தில் மேலாடை, தலைப்பாகை, வேட்டி அணிந்திருந்தனர். தற்போது ராமர் கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் மாற்றமாக அர்ச்சர்கள் உடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் கருவறையில் கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள், பழம்பெரும் கலாசாரத்தைப் பின்பற்றி இனி மஞ்சள் (பீதாம்பரி) நிற உடையை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் அறக்கட்டளை நிர்வாகம், உடை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அர்ச்சகர்கள் இதுவரை அணிந்து வந்த காவி உடை மாற்றப்பட்டு மஞ்சள் நிற உடை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, காவி நிறத்தில் அர்ச்சகர்கள் சௌபந்தி எனப்படும் மேலாடை, வேட்டி, தலைப்பாகை அணிந்திருந்தனர். தலையில் கட்டப்படும் தலைப்பாகை துணி பருத்தியால் ஆனதாக இருக்கும். அது மட்டுமல்ல, தலைப்பாகையை மிக நேர்த்தியாக கட்டுவதற்கு, அர்ச்சகர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலாடையான சௌபந்தி என்ற குர்த்தி போன்ற உடையில் பொத்தான்களுக்கு பதிலாக கயிறு போன்ற அமைப்பு இருக்கும். வேட்டி, காலின் கணுக்கால் மறைப்பது போல கட்ட வேண்டும்.
சநாதன தர்த்தைப் பின்பற்றி, ராமர் கோயிலில் உதவி அர்ச்கர்கள் அனைவரும், தலை முதல் கணுக்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும். இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். ஆனால், இனி ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலின் கருவறைக்குள் இருக்கும்போது, அர்ச்சகர்கள், செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இதுபோன்ற தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டதில்லை.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயிலின் கருவறையில் இருக்கும் அர்ச்சகர்கள், செல்ஃபோன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது அவசியமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கோயிலின் கருவறையில் மழை நீர் கழிவது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் கருவறைக்குள் செல்ஃபோன் கொண்டு செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு, பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறப்பட்டாலும், அண்மையில் கருவறைக்குள் தண்ணீர் கசிவது தொடர்பாக தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் வெளியிட்ட தகவலை முன்னிட்டே இந்த தடை பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தலைமை அர்ச்சகரின் இந்த குற்றச்சாட்டை, கோயில் நிர்வாகத்தின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் கோயில் கட்டமைப்புக் குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ந்ரிபேந்திரா மிஷ்ரா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கோயிலின் தலைமை அர்ச்சகருக்கு 90 வயதானதை கருத்தில் கொண்டு அவருக்கு பதில் வேறொருவரை நியமிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கோயிலின் கருவறைக்குள் சேவை செய்யும் அர்ச்சகர்களின் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை, கோயிலின் கருவறைக்குள், ஒரு மூத்த அர்ச்சகர் மற்றும் அவருக்கு உதவியாக நான்று உதவி அர்ச்சகர்கள் என ஐந்து பேர் கொண்ட குழு இருக்கும். ஆனால், தற்போது, மூத்த அர்ச்சகர் மற்றும் நான்கு உதவி அர்ச்சகர்களுடன், ஐந்து பயிற்சி அர்ச்சகர்களும் இருப்பார்கள். கோயிலின் கருவறையில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை அர்ச்சகர்கள் சேவை செய்வார்கள்.
ராமர் கோயிலுக்குள் செல்ஃபோனுக்கு தடை
இது மட்டுமல்லாமல், கோயிலுக்குள் அர்ச்சகர்கள் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் கோயிலின் கருவறைக்குள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அது வெளியானதன் மூலம், கோயிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமிருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.