ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை, குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் என யுஐடிஏஐ சார்பில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் குடியுரிமை அல்லது குடியுரிமைக்கான சான்றாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த விசாரணையின்போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் லக்ஷ்மி குப்தா, ஆதார் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) சட்டத்தை மேற்கோள்காட்டி, ஆதார் எண் குடியுரிமைக்கான சான்று என குறிப்பிடப்படவில்லை என்று வாதத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், ஆதார் அட்டை என்பது இந்தியாவில் குறைந்தபட்சம் 182 நாள்கள் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும், இதன் முதன்மையான நோக்கம், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை, நேரடியாக பயனர்கள் அடைவதை எளிதாக்குகிறது என்று குப்தா நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஆதார் சட்டம், 2023 இன் 28ஏ பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி, தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது இந்த வாதத்தை யுஐடிஏஐ முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சட்டப்பிரிவு வெளிநாட்டு குடிமக்களுக்கான பிரிவாக உள்ளது. அதன்படி, விசா காலாவதியான பிறகு, நாட்டில் அதிக காலம் தங்கியிருக்கும் வெளிநாட்டவரின் ஆதார் அட்டையை செயலிழக்கச் செய்ய யுஐடிஏக்கு அதிகாரம் உள்ளது என்றும் குப்தா கூறினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் குமார் சக்ரவர்த்தி, ஆதார் சட்டத்தின் 54வது பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யாததால், மனு மீது விசாரணையைத் தொடர வேண்டாம் என்றும், நாட்டின் இறையாண்மையை மனுதாரர் எதிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை என்பது ஒரு அடையாளச் சான்று மட்டுமே, அது குடியுரிமை அல்லது பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்றும், இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டவரும் ஆதார் அட்டை பெற தகுதியுடையவர் என்றும் கடந்த ஜனவரி மாதமே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.