சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் (54) வெள்ளிக்கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்ணாநகரில் உள்ள காவல்நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை வழக்குத் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும். இதற்கிடையே மூன்று முறை உளவுத்துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புலனாய்வு அமைப்புகளிடமிருந்து எந்த உளவுத் தகவலும் வரவில்லை என்றார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது என்பது குறித்து இடம் இன்னும் முடிவாகவில்லை என்றும் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.
இந்தக் கொலைக்கு எம்மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது வழக்கு விசாரணைக்கு பின் தெரிவிக்கப்படும். இம்மாதிரியான வழக்குகளில் உடனடியான எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.
சென்னையில் ரவுடிகள் மீது கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது தொடரப்பட்ட 7 வழக்குகளும் முடித்துவைக்கப்படும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில், வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டுக்கு அருகே கொலை செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் நண்பர்களுடன் வந்த ஆம்ஸ்ட்ராங்கை, 6 போ் கொண்ட கும்பல் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்ததில், அவர் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது கட்சி அலுவலகத்திலேயே உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.