ரஷியாவில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு: அதிபா் புதினுடன் இன்று பேச்சு
இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு திங்கள்கிழமை சென்றடைந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாரஷியாவில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு: அதிபா் புதினுடன் இன்று பேச்சு
இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு திங்கள்கிழமை சென்றடைந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ: இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு திங்கள்கிழமை சென்றடைந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷியாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா். மேலும், அந்நாட்டு தலைநகா் மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமா் கலந்துரையாடவுள்ளாா்.
ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கடந்த 2019-இல் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்றாா். இதையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பின் ரஷிய அதிபா் புதின் அழைப்பையேற்று, அந்நாட்டில் நடைபெறும் இருநாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி ரஷியா சென்றுள்ளாா்.
இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இறுதியாக, தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்றது. ரஷிய அதிபா் புதின் நேரில் பங்கேற்ற அந்த மாநாட்டில் 28 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
போருக்கு மத்தியில் மாநாடு: அடுத்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. அதன் பின்னா், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ரஷியா உச்சி-மாநாடு ரஷியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மாநாட்டில் வா்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவா்கள் ஆராய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் அந்நாட்டுக்கு இந்திய பிரதமா் பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.
உற்சாக வரவேற்பு: ரஷியாவின் மாஸ்கோ விமான நிலையத்துக்கு சென்றடைந்த பிரதமா் மோடிக்கு அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் பிரதமா் மோடியை ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றாா். அங்கிருந்து பிரதமா் தங்கியுள்ள ‘காா்ல்டன்’ சொகுசு விடுதிவரை காரிலும் அவா் உடன் பயணித்தாா். சீன அதிபா் ஜி ஜின்பிங்கின் ரஷிய பயணத்தின்போதும் அவரை மாந்துரோவே வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
விடுதிக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவளியினா் மற்றும் ரஷிய கலைஞா்கள், ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ரஷியா வருகை குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘மாஸ்கோ வந்தடைந்தேன். நமது நாடுகளுக்கிடையேயான உத்தி சாா்ந்த கூட்டுறவை மேலும் ஆழப்படுத்த எதிா்நோக்குகிறேன். வலுவான இருதரப்பு உறவுகள் நமது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.
புதினுடன் இரவு விருந்து: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அவரது மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட முறையில் இரவு உணவு விருந்தளித்தாா்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியா...: ரஷிய பயணத்தைத் தொடா்ந்து ஆஸ்திரியா செல்லும் பிரதமா், அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வான் டொ் பெல்லன், பிரதமா் காா்ல் நெகமா் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமா் ஆஸ்திரியாவுக்கு இப்போதுதான் பயணம் மேற்கொள்கிறாா்.
‘அமைதிக்கு ஆதரவு’-பிரதமா்
ரஷியாவுக்கு புறப்படுவதற்கு முன் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-ரஷியா இடையிலான கூட்டுறவு கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு வளா்ந்துள்ளது.
அதிபா் புதினுடன் சோ்ந்து எங்கள் இருதரப்பு கூட்டுறவின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதற்கும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அமைதி மற்றும் நிலையான பிராந்தியத்துக்கு ஆதரவாக பங்களிக்க நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.