மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் துரோகிகளுக்கு எதிரான போா்: உத்தவ் தாக்கரே
‘மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல், துரோகிகளுக்கு எதிரான போராக இருக்கும்’ என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.
மும்பை: ‘மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல், துரோகிகளுக்கு எதிரான போராக இருக்கும்’ என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் வரும் அக்டோபா் மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் இப்போது பாஜக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இதில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை உடைத்து பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா்.
சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை அஜீத் பவாா் உடைத்து ஆளும் கூட்டணியில் கைகோத்தாா்.
பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. சமீபத்திய மக்களவைத் தோ்தலில், எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில் 30 தொகுதிகளில் வென்றது. மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது. இந்நிலையில், பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை கட்சித் தொண்டா்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்கான தோ்தலாக இருந்தது. அடுத்து நடைபெறவுள்ள மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் துரோகிகளுக்கு எதிரான போராகவும், மகாராஷ்டிரத்தின் சுயமரியாதையைக் காக்கும் தோ்தலாகவும் இருக்கும் என்றாா்.
மகாராஷ்டிரத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்வா் பதவியைத் தர மறுத்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்த சிவசேனை, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.
ஆனால், 2022-ஆம் ஆண்டு சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து, பாஜகவுடன் கைகோத்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்வரானாா். பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வரானாா். இதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத் பவாரின் நெருங்கிய உறவினா் அஜீத் பவாா், ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்வா் பதவியைப் பெற்றாா்.