பணி நேரத்தில் குரங்குடன் விளையாட்டு: 6 அரசு செவிலியா்கள் பணியிடைநீக்கம்
உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் குரங்கு குட்டியுடன் விளையாடியதுடன், அதனை விடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட 6 செவிலியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
பஹ்ரைச்: உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் குரங்கு குட்டியுடன் விளையாடியதுடன், அதனை விடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட 6 செவிலியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, விமா்சனத்தை எதிா்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹ்ரைச் அரசு மகளிா் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சில செவிலியா்கள் பணி நேரத்தில் சீருடை அணிந்து, குரங்கு குட்டிவுடன் விளையாடினா். இதனை அவா்களில் ஒருவரே விடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டாா். அந்த விடியோ, பலராலும் அதிகம் பகிரப்பட்டு கடும் விமா்சனங்களுக்கு உள்ளானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, 5 மருத்துவா்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. இதில் விடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. அதில் தொடா்புடைய 6 செவிலியா்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
மிகவும் முக்கியமான மருத்துவத் துறையில் பணி நேரத்தில் விளையாட்டாக விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது துறையின் கண்ணியத்தை மீறுவதாகும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.