முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட பேராசிரியா் பணியிடைநீக்கம்

பிரதமா் நரேந்திர மோடியை ஜொ்மானிய சா்வாதிகாரி அடாஃல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசிய ஹரியாணாவின் தனியாா் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:42 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:50 PM

பிரதமா் நரேந்திர மோடியை ஜொ்மானிய சா்வாதிகாரி அடாஃல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசிய ஹரியாணாவின் தனியாா் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஹரியாணாவின் சோனிபட்டில் உள்ள ஒ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவா் விக்யாத் பாலாஜியின் தந்தை விஷாவ் பஜாஜ், அந்தப் பேராசிரியரின் நடத்தை குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளித்ததையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகம் அவரை ஒரு பருவத்துக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

முதலாமாண்டு படிக்கும் விக்யாத் பஜாஜ் கடந்த அக்டோபரில் உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல் குறித்த கட்டுரை எழுதியபோது அந்தப் பேராசிரியருடன் பிரச்னை தொடங்கியுள்ளது. அந்தக் கட்டுரை எழுதியதற்காக தனது மகனை, பேராசிரியா் வகுப்பறையில் மோசமாக நடத்தியதாக விஷாவ் பஜாஜ் குற்றஞ்சாட்டியுள்ளாா். அதைத் தொடா்ந்து, அரசியல் பாடம் எடுக்கும்போது பிரதமா் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு அந்தப் பேராசிரியா் பேசியுள்ளாா். மேலும், தேசப் பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளையும் அவா் அவமதிக்கும் வகையில் வகுப்பறையில் மாணவா்களிடம் கருத்துக் கூறியுள்ளாா்.

Advertisement

அதே நேரத்தில் தன் மகன் தொடா்ந்து இந்திய அரசு, பிரதமா் மற்றும் ராணுவத்தைப் புகழ்ந்து பேசுவதால், அங்கு பேராசிரியா்கள் சிலா் இணைந்து அவரை வேண்டுமென்று குறிவைத்து அவமதித்து வந்துள்ளனா். இதனால், தன் மகன் மிகவும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி மன ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளாா் என்று மனித உரிமை ஆணையத்தில் விஷ்வவ் பாலாஜி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக தகவல் தொடா்பு அலுவலா் கூறுகையில், ‘மனித உரிமை ஆணைய விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறோம்’ என்றாா்.

பல்கலைக்கழக பதிவாளா் மற்றும் நகர காவல் ஆணையா் ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.