பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் என்ற விருது வழங்கி அதிபர் விளாதிமீர் புதின் இன்று (ஜூலை 9) கெளரவித்தார்.
ரஷிய நாட்டின் உயரிய குடிமகன் விருதாக இது பார்க்கப்படுகிறது.
விருது பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, ''ரஷிய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை எனக்கு வழங்கியதற்கு இதயப்பூர்வமான நன்றி.
இது எனக்கான கெளரவம் மட்டும் அல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கான கெளரவம். இந்தியா - ரஷியா இடையிலான உறவு, ஆழமான நட்பு, பரஸ்பர நம்பிக்கைக்கு வழங்கப்பட்ட மரியாதை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டின் உறவை வலுப்படுத்த அளித்துவரும் உங்களின் (விளாதிமீர் புதின்) பங்களிப்பிற்கு நன்றி. இந்தியா - ரஷியா உறவுகள் எல்லா விதங்களிலும் வலுப்பெற்று புதிய உயரங்களை எட்டியுள்ளன'' என மோடி குறிப்பிட்டார்.
விருது வழங்கிய பிறகு இது தொடர்பாக புதின் தெரிவித்துள்ளதாவது,
''ரஷிய நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியதில் மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரஷியா - இந்தியா உறவு வலிமை பெற்றுள்ளது. சர்வதேச அரங்கில் ரஷியா - இந்தியா ஒத்துழைப்பை மேம்படுத்த மோடியின் பங்களிப்பு அளப்பரியது'' எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள்கள் பயணமாக ரஷியா சென்றுள்ள நிலையில், இரண்டாவது நாளான இன்று மாஸ்கோவிலுள்ள வீரர்கள் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்றும், அதிபர் விளாதிமீர் புதினை மோடி சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்தும், எல்லைகளிடையே அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் புதினுடன் மோடி கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.