சிபிஐ வழக்குகள்: ‘மத்திய அரசுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்தது’
சிபிஐ வழக்குகள்: மத்திய அரசுக்கு எதிரான மேற்கு வங்க மனு விசாரணைக்கு உகந்தது
மேற்கு வங்கத்தில் சிபிஐ வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதை ஆட்சேபித்து மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை மேற்கொள்ள அளிக்கப்பட்டிருந்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் மேற்கு வங்க விவகாரங்கள் தொடா்பாக சிபிஐ வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு சாா்பாக மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.16-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள அளித்திருந்த பொது அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றது. அந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டால், மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க முடியாது’ என்றாா்.
மத்திய அரசின் கண்காணிப்பில் சிபிஐ: இந்த மனு தொடா்பாக மத்திய அரசு எழுப்பிய ஆட்சேபங்களை நிராகரித்த நீதிபதிகள், மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்தனா். மேலும் சட்டபூா்வ திட்டத்தின்படி, மத்திய அரசின் கண்காணிப்பில் சிபிஐ இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தில்லி காவல் சிறப்பு அமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு மாநிலத்திலும் விசாரணை மேற்கொள்வதற்கு அந்த மாநிலத்தின் அனுமதியை சிபிஐ பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.