முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ஆட்சி மாற்றம்: விருப்ப ஓய்வு அறிவித்த சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் அதிகாரி!

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அதிகாரி விருப்ப ஓய்வு அறிவிப்பு

Updated On : 10 ஜூலை, 2024 at 3:34 PM
பகிர்:

ஆந்திர பிரதேசத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷ், 2019-ல் தலைமை செயலர் எல்வி.சுப்ரமணியம் பதவி இடமாற்ற விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானவர், விருப்ப ஓய்வில் பணியிலிருந்து விடுபடவுள்ளார்.

முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பிரவீன் பிரகாஷ் இன்னும் 7 ஆண்டுகள் பணிக்காலம் மீதமுள்ள நிலையில் விருப்ப ஓய்வை அறிவித்துள்ளார்.

அனைந்திந்திய சேவைகள் (இறப்பு மற்றும் ஓய்வு பயன்கள்) விதிகள் 1958 விதி எண் 16 துணை விதி (2)-ன் படி மாநில அரசு இவரது விருப்ப ஓய்வை ஏற்று, செப்.30,2024 முதல் ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

Advertisement

ஜெகன் மோகன் ரெட்டி

ஜூலை 9-ம் தேதி தலைமைச் செயலர் நீரப் குமார் பிரசாத் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி சார்பில் முதல்வரான சந்திரபாபு நாயுடு, 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம்மாற்றினார்.

அந்த நடவடிக்கையில் பிரவீன் பிரகாஷ் உள்பட 3 அதிகாரிகளுக்கு எந்தவித பதவியும் ஒதுக்கப்படாமல் பொது நிர்வாக துறையின்கீழ் மாற்றப்பட்டிருந்தனர்.

முன்னதாக பிரவீன் பிரகாஷ் பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலராக பணியாற்றி வந்தார்.

2019 ஒய்எஸ்ஆர் ஆட்சிக்கு வந்த பின்னர் தில்லியில் ஆந்திர பிரதேச அரசு ஆணையராக பணியாற்றிய பிரவீன் பிரகாஷை ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்துக்கு அழைத்துக்கொண்டார்.

2019-ல் முதன்மைச் செயலர் எல்வி. சுப்பிரமணியம் இடம் மாற்றப்பட்ட விவகாரத்தில் இவரது பெயர் சர்ச்சைக்குள்ளானது.

ஜகன்மோகன் ரெட்டியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருந்துள்ளார். கடைசியாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்தபோது அவரது அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்புகள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதாக அறிவித்தன.

முதல்வர் போலவே 10-க்கும் மேற்பட்ட கார்கள் முன்னரும் பின்னரும் தொடர பள்ளிகளில் சோதனை நடத்திய பிரவீன் பிரகாஷ், ஆந்திரத்தில் 100 சதவிகித மாணவ சேர்க்கை (ஜிஇஆர்) விகிதம் கொண்டுவரவில்லையெனில் பதவி விலகுவதாக கடந்த ஆகஸ்டில் கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் தான் பணியில் தொடரப் போவதில்லை என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியமைத்துள்ள தெலுங்கு தேச கூட்டணி அரசின் கீழ் பணியாற்றுவதிலிருந்து விலகியுள்ளார் பிரவீன் பிரகாஷ். ஜூன் 25-ம் தேதி புதிய அரசின் பணி மாற்ற ஆணைக்கு பிறகு விருப்ப ஓய்வை அறிவித்துள்ளவரின் ஓய்வுக் காலம் செப்.30 முதல் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.