ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தது ஏன்? ரகசியம் பகிர்ந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்ததற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்ததற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில், தன்னை தக்கவைப்பதா, வேண்டாமா போன்ற நெருக்கடிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸை ஆளாக்க வேண்டாம் என நினைத்து ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் ரகசியம் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கடந்த ஐபிஎல் சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. தனிப்பட்ட விதத்தில் அந்த சீசன் எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. நேர்மையாக கூறவேண்டுமென்றால், நான் இன்னும் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கலாம். ஆனால், உணர்வுப்பூர்வமாக ஓய்வு முடிவை எடுத்துவிட்டேன்.
கடந்த சீசன் எனக்கு மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மிகுந்த வலியுடனும், குழப்பத்துடனும் இருந்தேன். அதனால், ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என நினைத்தேன். ஓய்வு பெறுவது குறித்து சிறிது யோசித்தேன். சென்னை சூப்பர் கிங்ஸில் என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன். அங்கிருந்தே ஓய்வை அறிவித்துவிடுவது நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. என்னை தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற நெருக்கடியை அணி நிர்வாகத்துக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்தேன்.
நான் ஓய்வை அறிவித்ததால், சென்னை சூப்பர் கிங்ஸிடம் ரூ. 10 கோடி தொகை இருந்தது. ஐபிஎல் மினி ஏலத்தில் அவர்கள் நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து, அணியை வலுவாக கட்டமைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யாதது எனக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. நல்ல வீரர்களை அணியில் எடுப்பார்கள் என நம்பினேன் என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் வெறும் 9 போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவிப்பதற்கு முன்பாக, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய ரோல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் அஸ்வின் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
Former Indian cricketer Ravichandran Ashwin has shared the reason behind his decision to retire from the IPL.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.