அண்மையில் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று புணே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பூஜா தனது சொகுசு வாகனத்தில் சைரன் அமைப்பைப் பொருத்திக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்வான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்ததன் மூலம் அது வைரலாகி, பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. இதனால், பூஜா கேத்கர் புணேவிலிருந்து பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், புணே காவல்துறையினர், இன்று பூஜா கேத்கர் வீட்டுக்குச் சென்று அவரது காரை ஆய்வு செய்தனர். அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் புணே துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை அவர் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதாவது சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார்.
கூடுதல் ஆட்சியரின் அலுவலகத்தையும் முன் அனுமதியின்றி பூஜா அபகரித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோல, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பூஜாவின் தந்தைக்கு 40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், அவர் பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.