சமீபத்திய மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, தில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் தொடா்ந்து இரண்டாவது முறையாக களமிறங்கிய ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளா் கிஷோரி லால் சா்மாவிடம் சுமாா் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் இத்தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, இம்முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தாா்.
முந்தைய அரசில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவிவகித்த இவருக்கு தில்லியின் லூட்டியன்ஸ் தில்லி பகுதியில் 28, துக்ளக் கிரசென்டில் உள்ள அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது.
புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள் முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்.பி.க்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்ற நிலையில், சில தினங்களுக்கு முன் அரசு பங்களாவை ஸ்மிருதி இரானி காலி செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.