ரத்து செய்யப்பட்ட தோ்தல் நிதிப் பத்திர திட்ட முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
பொது நலனுக்கான தன்னாா்வ அமைப்பு மற்றும் பொது நல வழக்கு விவகாரங்களுக்கான மையம் ஆகியவை சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘தோ்தல் நிதிப் பத்திர திட்டம் மிகப்பெரிய முறைகேடு. தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், போலி மற்றும் நஷ்ட வரவு-செலவு கணக்குகளை சமா்ப்பித்த நிறுவனங்கள் சாா்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தின் கீழ் நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு போலிக் கணக்குகளைக் காட்டி கிடைத்த குற்ற வருவாய் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் அளித்த நன்கொடைகளைப் பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த மனு தொடா்பாக உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தை கடந்த சில மாதங்களாக தொடா்ந்து அணுகியும், இன்னும் மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புக்கொண்டனா்.
அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நன்கொடை அளிக்கும் நடைமுறை என்ற பெயரில் தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்து, 2018-ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்தத் திட்டம் மூலம் ஆளும் பாஜக பெருமளவு பலனடைந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ‘இத் திட்டம் அரசமைப்பு சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது; சட்டவிரோதமானது’ என்று கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி குறிப்பிட்ட உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இத் திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.