மேற்கு வங்க ஆளுநா் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுதொடா்பாக மாநில அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) மசோதா, மேற்கு வங்க தனியாா் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடா்ந்து 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க நகரம் மற்றும் ஊரக (திட்டமிடல், வளா்ச்சி) (திருத்த) மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதுபோல 8 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆளுநா் நிலுவையில் வைத்துள்ளதாக மாநில அரசு குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவில், ‘மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளாா். எந்தக் காரணமும் இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-க்கு முரணானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வின் கவனத்துக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அஸ்தா சா்மா, ‘கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட மேற்கு வங்க அரசின் மனு இதுவரை விசாரணைக்குப் பட்டியிடப்படவில்லை’ என்றாா்.
இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.