முகப்பு
இந்தியா

உ.பி. அவலம்.. ஆம்புலன்ஸ் இன்றி சகோதரி உடலை சுமந்து செல்லும் சகோதரர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இன்றி சகோதரி உடலை சுமந்து சென்ற சகோதரர்களின் விடியோ வெளியாகியிருக்கிறது.

Updated On : 12 ஜூலை, 2024 at 3:07 PM
உ.பி. அவலம்
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், டைபாய்டு காய்ச்சலால் மரணமடைந்த தனது சகோதரியின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சகோதரர்களே சுமந்து சென்ற விடியோ கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் வயது பெண் ஷிவானி, உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரை சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவர் உயிரிழந்துவிட்டார். மனம் உடைந்த சகோதரர்கள், தங்களது சகோதரியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வர முடியாத நிலையில் ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சுமந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்களது வீட்டுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் தண்டவாளம் அமைந்திருக்கும் பாதை வழியாகவே, அவரது சகோதரர் ஷிவானியின் உடலை சுமந்துச் செல்கிறார்.

நாட்டின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்திலும் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, மின்வசதி இன்றி, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், அடுத்த இரண்டு நாள்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்வதும், வெள்ளம் சூழ்வதும் என நடந்துகொண்டே இருந்தாலும், மாநில அரசு, வெள்ளத் தடுப்பு மற்றும் மக்களைக் காப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில்லை என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி அவசியம் என்பதையும் அதனை முன்கூட்டியே செய்யாமல் விடுத்தது மாநில அரசின் கவனக்குறைவே காரணம் என்றும் சமூக வலைத்தளத்தில் மக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.