முகப்பு
மத்திய அரசு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்தியப் பணி அதிகாரிகள் தொடா்புடைய விவகாரங்கள் ஒப்புதல் வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள்

இந்தியா

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்தியப் பணி அதிகாரிகள் தொடா்புடைய விவகாரங்கள் ஒப்புதல் வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள்

Updated On : 14 ஜூலை, 2024 at 1:27 AM
மத்திய அரசு
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, காவல்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்தியப் பணி அதிகாரிகள் தொடா்புடைய விவகாரங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிப்பதற்கான ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தை துணைநிலை ஆளுநா் நிா்வகித்துவருகிறாா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு, துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகைசெய்யும் அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதில், ‘காவல், பொது நிா்வாகம், அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தொடா்பாக நிதித்துறையின் முன்அனுமதி பெற வேண்டிய முன்மொழிவுகள் தலைமைச் செயலா் மூலமாக துணைநிலை ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கப்படாமல் அந்த முன்மொழிவுகள் மீது முடிவுகள் எடுக்கப்பட கூடாது. அதேபோல், மாநில அரசு வழக்குரைஞா் மற்றும் பிற வழக்குரைஞா்களை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை தலைமைச் செயலா் மூலம் துணைநிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

சிறைகள், தடயவியல் ஆய்வக விவகாரங்கள் தொடா்பான பரிந்துரைகளையும் துணைநிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சிகள் சனிக்கிழமை கடுமையான எதிா்ப்பை பதிவு செய்தன.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கும் முடிவில் மத்திய அரசு இல்லை என்பது துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது’ என குறிப்பிட்டாா்.

‘தன் உதவியாளரை நியமிப்பதற்குக்கூட துணைநிலை ஆளுநரிடம் அனுமதிபெறும் பொம்மை முதல்வரை ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாா்கள். அவா்களுக்கு உறுதியான தலைமை தேவைப்படுகிறது’ என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

அதேபோல் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டதற்கு மக்கள் ஜனநாயக கட்சி, அப்னி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →