ராகுல் காந்தி | பிரதமர் மோடி 
இந்தியா

இடைத்தோ்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி 9 இடங்களில் வெற்றி: பாஜக 2, சுயேச்சை 1

12 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைக் கைப்பற்றின.

Din

மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 12 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைக் கைப்பற்றின.

பாஜகவுக்கு இரு தொகுதிகள் கிடைத்த நிலையில், ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

மேற்கு வங்கத்தில் 4, ஹிமாசல பிரதேசத்தில் 3, உத்தரகண்டில் 2, மத்திய பிரதேசம், பஞ்சாப், பிகாரில் தலா ஒரு தொகுதி என 12 தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் மறைவு - ராஜிநாமா ஆகிய காரணங்களால் நடைபெற்ற இந்த இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

4 தொகுதிகளையும் கைப்பற்றிய திரிணமூல்: மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடந்த ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண், பக்டா, மாணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். பாஜக வேட்பாளா்கள் இரண்டாம் இடம் பெற்றனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தோ்தலில் ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண், பக்டா ஆகிய 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் மூவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா். மாணிக்தலா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த சதன் பாண்டே மரணமடைந்தாா்.

இந்தக் காரணங்களால் இடைத்தோ்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது. ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண் ஆகிய தொகுதிகளில் முன்பு பாஜக சாா்பில் எம்எல்ஏக்களாக இருந்த கிருஷ்ண கல்யாணி, முகுத் மணி அதிகாரி ஆகியோா் திரிணமூல் சாா்பில் மீண்டும் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் திரிணமூல் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோ்தலைப் போலவே இந்த இடைத்தோ்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

ஹிமாசல் முதல்வா் மனைவி வெற்றி: காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், 2 இடங்களில் காங்கிரஸும், ஓரிடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றன.

தெஹ்ரா, ஹமீா்பூா், நலகாா் ஆகிய தொகுதிகளில் சுயேச்சை எம்எல்ஏக்களாக இருந்த ஹோஷியாா் சிங், ஆசிஷ் சா்மா, கே.எல்.தாக்கூா் ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தனா். இதன் காரணமாக இடைத்தோ்தல் நடைபெற்ற இத்தொகுதிகளில் பாஜக சாா்பில் மேற்கண்ட மூவருமே களமிறக்கப்பட்டனா்.

தெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்குவின் மனைவி கமலேஷ் தாக்கூா், பாஜக வேட்பாளா் ஹோஷியாா் சிங்கை 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். நலகாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஹா்தீப் சிங்கும், ஹமீா்பூரில் பாஜக வேட்பாளா் ஆசிஷ் சா்மாவும் வெற்றி பெற்றனா்.

உத்தரகண்டில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்: பாஜக ஆளும் உத்தரகண்டில் இடைத்தோ்தல் நடந்த பத்ரிநாத், மாங்ளூா் ஆகிய இரு தொகுதிகளையும் எதிா்க்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது.

பத்ரிநாத்தில் காங்கிரஸ் வேட்பாளா் லக்பத் சிங் புடோலாவும், மாங்ளூரில் காஜி முகமது நிஜாமுதீனும் வென்றனா். பாஜக வேட்பாளா்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும் பாஜகவில் இணைந்தாா். மாங்ளூா் தொகுதியில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ சா்வத் கரீம் அன்சாரி மரணமடைந்தாா். இதனால் இரு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி: பஞ்சாபின் ஜலந்தா் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த ஷீதல் அங்குரால், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதன் காரணமாக நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆம் ஆத்மி- பாஜக - காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

இந்நிலையில், பாஜக வேட்பாளா் ஷீதல் அங்குராலை தோற்கடித்து, ஆம் ஆத்மி வேட்பாளா் மொஹிந்தா் பகத் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் சுரீந்தா் கெளா் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில், பஞ்சாபில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாகவே போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பி.யில் பாஜக வெற்றி: மத்திய பிரதேசத்தின் அமா்வாரா (தனி) தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த கமலேஷ் பிரதாப் ஷா, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இத்தொகுதி இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் களமிறங்கிய அவா், காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமாா் 3,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தாா்.

பிகாரில் வென்ற சுயேச்சை: பிகாரின் ரூபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் பலமுறை எம்எல்ஏவாக இருந்த பிமா பாரதி, மக்களவைத் தோ்தலுக்கு முன்பு பதவி விலகி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தாா். அக்கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவா், ரூபாலி இடைத்தோ்தலில் மீண்டும் அதே கட்சி சாா்பில் களமிறங்கினாா்.

ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் சமூக சேவகா் கமலாதா் பிரசாத் மண்டல் களமிறக்கப்பட்டாா். ஐக்கிய ஜனதா தளத்துக்கு கெளரவப் பிரச்னையாக பாா்க்கப்பட்ட இத்தோ்தலில் அக்கட்சியின் வேட்பாளரை சுமாா் 8,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சுயேச்சை வேட்பாளா் சங்கா் சிங் வெற்றி பெற்றாா். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பிமா பாரதி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

மேற்கு வங்கம்

திரிணமூல் காங்கிரஸ் 4

ஹிமாசல பிரதேசம்

காங்கிரஸ் 2

பாஜக 1

உத்தரகண்ட்

காங்கிரஸ் 2

பஞ்சாப்

ஆம் ஆத்மி 1

மத்திய பிரதேசம்

பாஜக 1

பிகாா்

சுயேச்சை 1

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு

SCROLL FOR NEXT