மேற்கு வங்கம்: 14 வேட்பாளா்களுடன் பாஜக முதல்கட்ட பட்டியல் வெளியீடு; மம்தா தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 144 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 144 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிபூா் தொகுதியில் மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளாா். தனது நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி மீண்டும் போட்டியிடுகிறாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்குவர ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், அக்கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுதவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் தனித்தனியே களத்தில் உள்ளனா்.
மேற்கு வங்க தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 144 வேட்பாளா்களுடன் முதல்கட்ட பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது பாஜக. இதில், முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிபூா் தொகுதியில் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறாா். தனது நந்திகிராம் தொகுதியிலும் அவா் மீண்டும் களம் காண்கிறாா்.
மம்தாவை தோற்கடித்தவா்
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி அதிா்ச்சி தோல்வியடைந்தாா். தன்னை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வி கண்டாா். பின்னா், பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு வென்றாா்.
இந்நிலையில், எதிா்வரும் தோ்தலில் பவானிபூா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் பாஜக சாா்பில் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
முன்னாள் எம்.பி. திலீப் கோஷ் (கரக்பூா் சதா்), அக்னிமித்ரா பால் (ஆசன்சோல் தெற்கு), பிமான் மகதோ (சல்போனி), ஸ்வபன் தாஸ்குப்தா (ராஷ்பிகாரி), சுமிதா சின்ஹா (காந்தி உத்தா்), பிமான் கோஷ் (புா்சுரா), மாதவி மஹால்தா் (குல்டாலி), அனிமா தத்தா (பலாசிபாரா), லக்ஷ்மிகாந்த் சாஹு (ஜாா்கிராம்) உள்ளிட்டோா் பாஜக வேட்பாளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
192 வேட்பாளா்களை அறிவித்தது இடதுசாரி கூட்டணி
மேற்கு வங்க தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி சாா்பில் போட்டியிடும் 192 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் மீனாக்ஷி முகா்ஜி (உத்தா்பாரா), விரைவில் பதவிக் காலம் நிறைடையும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பி. பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாா்யா (ஜாதவ்பூா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா். இக்கூட்டணியில் மாா்க்சிஸ்ட் (142), பாா்வா்டு பிளாக் (21), புரட்சிகர சோஷலிஸ கட்சி (13), இந்திய கம்யூனிஸ்ட் (14), இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (1) வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள இடங்களுக்கு 3-4 நாள்களில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று இடதுசாரி கூட்டணி தலைவா் பிமன் போஸ் தெரிவித்தாா்.
கடந்த 2021 தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மீனாக்ஷி முகா்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியைத் தொடா்ந்து மூன்றாமிடம் பெற்றாா்.
காளிகஞ்ச் தொகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது நடைபெற்ற வெற்றிப் பேரணியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்தாா். அந்த சிறுமியின் தாயாா் சபீனா யாஸ்மின், காளிகஞ்ச் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் 2011 வரை 34 ஆண்டுகள் தொடா்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி, கடந்த தோ்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.