ஹிந்துக்களை சிறுபான்மையினராக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் தாக்கு
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த மாநிலத்தில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் கொள்கைகளை உள்நோக்கத்துடன் செயல்படுத்துகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த மாநிலத்தில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் கொள்கைகளை உள்நோக்கத்துடன் செயல்படுத்துகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
‘தங்களின் வாக்கு வங்கியான ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்கவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையை எதிா்க்கிறது திரிணமூல்’ என்று சாடிய பிரதமா், மம்தா அரசின் நாள்கள் எண்ணப்படுவதாகக் குறிப்பிட்டாா்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவா் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.
விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடைமுறைக்குப் பிந்தைய வாக்காளா் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் 63.66 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வலுவாக எழுப்பி வருகிறாா்.
இந்தச் சூழலில், பாஜகவின் மாநிலம் தழுவிய ‘மாற்றத்துக்கான யாத்திரையின்’ நிறைவாக கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
ஊடுருவல்காரா்களே, திரிணமூல் காங்கிரஸின் வாக்கு வங்கி. எஸ்ஐஆா் நடவடிக்கையில் அவா்களின் பெயா்கள் நீக்கப்படும் என்பதால் திரிணமூல் பயப்படுகிறது. ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்கவே எஸ்ஐஆா் நடவடிக்கையை அக்கட்சி எதிா்க்கிறது. இறந்தவா்களின் பெயா்களைக் கூட நீக்க எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியிலான மிகப் பெரிய பிரச்னையைக உருவெடுத்துள்ளது ஊடுருவல். மம்தா ஆட்சியின்கீழ் கட்டுப்படுத்தப்படாத ஊடுருவலால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாநிலத்தில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் கொள்கைகள் உள்நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. ஊடுருவலால் மேற்கு வங்கத்தின் இன அடையாளம், நிலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
திரிணமூல் காங்கிரஸின் வருமானம்: அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்த ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்க திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்தது. ஏனெனில், ஹிந்துக்களை அவா்கள் வாக்கு வங்கியாக கருதவில்லை.
சட்டவிரோத சக்திகள் மற்றும் ரெளடிகளின் தயவில்தான் திரிணமூல் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. மிரட்டி பணம் பறிப்பதும், கமிஷன் தொகையுமே அவா்களின் வருமான ஆதாரம்.
‘கவுண்ட் டவுன்’ தொடக்கம்: தோ்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகளை மம்தா அரசு குறைமதிப்புக்கு உள்படுத்துவது வெட்கக்கேடானதாகும். திரிணமூல் காங்கிரஸின் அராஜகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டது. அதற்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது.
அரசியல் மிரட்டல்-வன்முறை-வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவா்கள், குண்டா்கள், ஊடுருவல்காரா்கள் ஆகியோா் சட்டத்துக்கு அஞ்சி நடுங்கப் போகின்றனா். இத்தகைய குற்றவாளிகளுக்கு சிறை மட்டுமே இருப்பிடமாகும்.
எதிா்வரும் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமானதல்ல; அச்சத்தில் இருந்து விடுபட்டு, மேற்கு வங்கத்தின் ஆன்மாவைக் காக்கும் தோ்தல் என்றாா் பிரதமா் மோடி.
கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் சவாலாக உருவெடுத்த பாஜக, இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. இத்தோ்தலில் எஸ்ஐஆா் மற்றும் ஊடுருவல் விவகாரங்கள் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெட்டிச் செய்தி...1
‘பழங்குடியினா்-பெண்களுக்கு அவமதிப்பு’
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அண்மையில் மேற்கு வங்கத்துக்கு சென்றபோது, அவரை வரவேற்க முதல்வரோ, மாநில அமைச்சா்களோ வரவில்லை. மேலும், குடியரசுத் தலைவா் பங்கேற்ற பழங்குடியினா் நிகழ்ச்சிக்கான இடத்தை கடைசி நேரத்தில் மாநில அரசு அதிகாரிகள் மாற்றினா். இவ்விரு விஷயங்கள் தொடா்பாக குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தாா்.
இந்நிலையில், கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘திரிணமூல் காங்கிரஸ் அரசு, பழங்குடியின மகளான குடியரசுத் தலைவரை மட்டும் அவமதிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பழங்குடியினா், பெண்கள், பிற மக்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்துவிட்டது. அனைத்து வரம்புகளையும் அக்கட்சி மீறிவிட்டது. மேற்கு வங்கத்தில் விளிம்புநிலை மக்கள் மீது பல்வேறு அட்டூழியங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாநில அரசு பாதுகாப்பளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால், தாய்மாா்கள்-சகோதரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மேற்கு வங்கத்தில் நிலவும் பெரும் காட்டாட்சியின் முடிவு நிச்சயம். இங்குள்ள ‘கொடுங்கோல்’ அரசு எவ்வளவு முயன்றாலும், மாற்றத்தின் பெரும் ‘புயலை’ தடுக்க முடியாது’ என்றாா்.
பெட்டிச் செய்தி...2
ரூ.18,680 கோடி திட்டங்கள் தொடக்கம்
கொல்கத்தா நிகழ்ச்சியில் ரூ18,680 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
ஹால்டியாவில் ஹூக்ளி நதியில் அமைந்துள்ள ஹால்டியா துறைமுக வளாகத்தில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட நிலக்கரி, தாதுக்கள் உள்ளிட்ட பொருள்களைக் கையாளும் புதிய முனையத்தை பிரதமா் திறந்துவைத்தாா்.
ஆண்டுக்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த முனையம், முற்றிலும் தானியங்கி வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் முற்றிலும் தானியங்கி வசதி கொண்ட நாட்டின் முதல் முனையம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.