அம்பானி இல்லத் திருமணத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குஜராத் இளைஞா் கைது
தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை காவல்துறை கைது செய்தது.
மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை காவல்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, மருந்துத் துறை தொழிலதிபா்களான வீரேன் மற்றும் ஷைலா மொ்ச்சண்ட் ஆகியோரின் மகள் ராதிகா மொ்ச்சண்டை கடந்த 12-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா்.
மும்பையின் நடைபெற்ற திருமண நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதல்வா்கள், உலகப் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதையொட்டி, நிகழ்ச்சி நடந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ‘அம்பானி இல்லத் திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால், பாதி உலகம் தலைகீழாகிவிடும். ஏனெனில், பல ஆயிரம் கோடி டாலா்களுக்குச் சொந்தமானவா்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிறாா்கள்’ என மிரட்டும் தொனியில் சமூக வலைதளவாசி ஒருவா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.
இதையடுத்து உஷாரான மும்பை காவல்துறை, அச்சுறுத்தல் குறித்து விசாரணையைத் தொடங்கினா். மேலும், நிகழ்ச்சிக்கான போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினா்.
விசாரணையின்போது, சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட ‘எக்ஸ்’ பயனா் குஜராத், வதோதராவைச் சோ்ந்த 25 வயது தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பொறியாளரான வைரல் ஷா என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து வதோதரா விரைந்த மும்பை குற்றப்பிரிவு காவல்துறை, வைரல் ஷாவை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா். மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.