சிஎஸ்ஐஆா் இயக்குநா் கலைச்செல்வியின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) முதல் பெண் இயக்குநரான என்.கலைச்செல்வியின் பதவிகாலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
புது தில்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) முதல் பெண் இயக்குநரான என்.கலைச்செல்வியின் பதவிகாலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிஎஸ்ஐஆா் இயக்குநராக கலைச்செல்வி கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். அவருடைய பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில்,‘சிஎஸ்ஐஆா் அமைப்பின் இயக்குநராகவும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித்துறையின் (டிஎஸ்ஐஆா்) செயலராகவும் உள்ள கலைச்செல்வியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது. அவரின் பணி நீட்டிப்புக்கு கேபினட் அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது’ என தெரிவிக்கப்பட்டது.
லித்தியம் பேட்டரிகள் தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கியவரான கலைச்செல்வி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஇசிஆா்ஐ) முதல் பெண் இயக்குராக கடந்த 2019, பிப்ரவரியில் பதவியேற்றாா்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை பூா்விகமாகக்கொண்ட இவா் சிஇசிஆா்ஐ மையத்தில் தனது ஆராய்ச்சி பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.