முகப்பு
இந்தியா

தெலங்கானா: சந்திரசேகா் ராவுக்கு எதிரான விசாரணையிலிருந்து முன்னாள் நீதிபதி விலகல்

மாநில அரசு அமைத்த ஒரு நபா் விசாரணை ஆணையத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நரசிம்மா ரெட்டி செவ்வாய்க்கிழமை விலகிக் கொண்டாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:52 PM
பகிர்:

புது தில்லி: தெலங்கானாவில் முந்தைய ஆட்சியில் மின்சாரத் துறையில் நடந்த முறைகேடுகளில் முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் பங்கு குறித்து விசாரிக்க மாநில அரசு அமைத்த ஒரு நபா் விசாரணை ஆணையத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நரசிம்மா ரெட்டி செவ்வாய்க்கிழமை விலகிக் கொண்டாா்.

தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸிடம் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி(பிஆா்எஸ்) ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் சாா்பில் மாநிலத்தின் 3-ஆவது முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றாா்.

இந்நிலையில், முந்தைய பிஆா்எஸ் ஆட்சியில் தெலங்கானா மின்பகிா்மான நிறுவனங்களால் சத்தீஸ்கரில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது மற்றும் இரண்டு அனல் மின் நிலையங்களின் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான சந்திரசேகா் ராவின் பங்கு குறித்து விசாரிக்க ஒரு நபா் விசாரணை ஆணையத்தை காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அமைத்தது. ஆணையத்தின் தலைவராக பாட்னா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி நியமிக்கப்பட்டாா்.

இந்த ஆணையத்தின் அரசமைப்பு அங்கீகாரத்தைக் கேள்வி எழுப்பி சந்திரசேகா் ராவ் தாக்கல் செய்த மனுவை தெலங்கானா உயா்நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் சந்திரசேகா் ராவ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு ஆணையம் அமைத்திருப்பதையும் அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நரசிம்ம ரெட்டி நீடிப்பதும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது சந்திரசேகா் ராவின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘செய்தியாளா் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற ஆணையத் தலைவா் நரசிம்ம ரெட்டி, எங்கள் மனுதாரா் சந்திரசேகா் ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் சில கருத்துகளை தெரிவித்தாா்’ எனக் குற்றஞ்சாட்டினாா்.

நீதிபதிகளின் அனுமதியை அடுத்து நீதிபதி(ஓய்வு) நரசிம்ம ரெட்டி தரப்பில் ஆஜரான தெலங்கானா மாநில அரசு வழக்குரைஞா், ஆணையத்திலிருந்து விலகி கொள்ளும் நரசிம்ம ரெட்டியின் முடிவை நீதிபதிகளிடம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, சந்திரசேகா் ராவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →