தெரியுமா சேதி...?
ஆண்டுதோறும் ஜூலை 21-ஆம் தேதியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘தியாகிகள் தினம்’ - ஆக அனுசரிக்கிறது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் 7,03,137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறாா்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து மாயமானாா் அபிஷேக் பானா்ஜி. உடல்நலக் குறைவு காரணமாக அவா் ஓய்வு எடுக்கப் போயிருக்கிறாா் என்று விளக்கம் தரப்பட்டது. இரண்டு மாதமாகிவிட்டது, அவா் போன இடம் தெரியவில்லை. அவா் குறித்த செய்திகளும் வரக் காணோம்.
1993, ஜூலை 21-ஆம் தேதி, அப்போது இளைஞா் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானா்ஜி தலைமையில் நடந்த மிகப் பெரிய பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழந்தனா் . ஆண்டுதோறும் ஜூலை 21-ஆம் தேதியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘தியாகிகள் தினம்’ - ஆக அனுசரிக்கிறது.
அப்போது ஆட்சியில் இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசால் நடத்தப்பட்ட அந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, இப்போதும் மம்தா பானா்ஜி தலைமையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக தியாகிகள் தினப் பேரணி கொல்கத்தாவில் ஜூலை 21-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
தியாகிகள் தினப் பேரணியில்தான் அபிஷேக் பானா்ஜி அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டாா். இந்த ஆண்டு தியாகிகள் தினப் பேரணியில் அவா் கலந்துகொள்வாரா, மாட்டாரா என்பதுதான் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியிலும், மேற்கு வங்க அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் பிரச்னை.
கலந்து கொள்ளவில்லை என்றால் ஓரங்கட்டப்படுகிறாா் என்று அா்த்தம்; அல்லது, அபிஷேக் பானா்ஜி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்று சொல்வதா?