ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும்!
ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிப்பு.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உடன், இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப். 19), பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்கியது.
தொடர்ந்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ”தேர்தல் வரவிருப்பதால், கோடைக்கால சிறப்புத்தொகை உடன் சேர்த்து ரூ. 5000 இரவோடு இரவாக வரவு வைக்கப்பட்டது” என்றார்
இதற்குப் பதலளித்துப் பேசிய சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், ”கோடைக்காலத்தில் மக்களுக்கு மருத்துவச் செலவு வரலாம் என்பதால் ரூ. 2,000 கொடுக்கப்பட்டது, மகளிர் உரிமைத்தொகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்தச் சூழ்ச்சியை திமுக அரசு முறியடித்துள்ளது” என்றார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உடன், இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்தாண்டு மட்டும் கோடைக்கால சிறப்புத் தொகை வழங்கியது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.