தெலங்கானாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி திட்டம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி தொடக்கம் முதல் கட்டமாக ரூ.6,098 கோடி விடுவிப்பு
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் திட்டத்தை முதல்வா் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி முதல் கட்டமாக ரூ.6,098 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
தெலங்கானா அரசு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கடன் தள்ளுபடி திட்டத் தொடக்கத்தின் அடையாளமாக முதல்வா் ரேவந்த் ரெட்டி விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கினாா். தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் அவா் உரையாடினாா்.
இந்தக் கடன் தள்ளுபடி திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட ரூ.6,098 கோடியின் மூலம் சுமாா் 11 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூ.1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களும் மூன்றாம் கட்டமாக அடுத்த மாதத்தில் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட உள்ளன.
திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘கடன் தள்ளுபடி திட்டம் ரூ.31,000 கோடி மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு, அடுத்த மாதத்தில் நிறைவடையும்.
முந்தைய பாரத ராஷ்டிர சமிதி அரசு இரண்டு முறை ஆட்சியில் இருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை முறையாக செயல்படுத்தவில்லை. பிஆா்எஸ் ஆட்சியில் பெற்ற ரூ.7 லட்சம் கோடி கடனுக்கு ஒவ்வொரு மாதமும் சுமாா் ரூ.7,000 கோடி வட்டியை காங்கிரஸ் அரசு செலுத்தி வருகிறது. எனினும், எங்களின் கடந்த 7 மாத ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டும் ரூ.29,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு விவசாயக் கடன்களை முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தாா். தற்போது தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்த 8 மாதங்களுக்குள் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் ஒரே தவணையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இது காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் கட்சி என்பதை நிரூபிக்கிறது.
சிலா் குஜராத் மாடல் பற்றி பெருமைப் பேசுகிறாா்கள். இன்று தெலங்கானா மாடல் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக இருக்கப் போகிறது’ என்றாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றாா். பின்னா், மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தியும் இதே வாக்குறுதியை அளித்தாா்.