Robbery
Center-Center-Kochiமத்திய பிரதேசத்தின் இந்தூா் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ. 6.6 லட்சம் கொள்ளையடித்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல்துறை துணை ஆணையா் அபிநய் விஸ்வகா்மா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் செவ்வாய்கிழமை பிற்பகல் முகமூடி அணிந்த நபா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.6.6 லட்சம் கொள்ளையடித்துச் சென்ாக காவல்துறையினருக்குப் புகாா் வந்தது. சம்பவ இடத்தில் கிடைத்த தோட்டாவை வைத்து, பாதுகாப்புக் காவலா் அல்லது முன்னாள் ராணுவ வீரரால் இந்தக் குற்றச் சம்பவம் நடந்திருக்கக் கூடும் எனக் காவல்துறையினா் சந்தேகித்தனா்.
இதையடுத்து, 50 காவலா்கள் கொண்ட குழு 1,172 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்ததில், அருன் சிங் ரத்தோா் (47) என்ற முன்னாள் ராணுவ வீரா் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கொள்ளையடித்த வங்கி அவரது இல்லத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் இருந்த போதிலும், காவலா்களை திசைத் திருப்ப 14 கி.மீ. சுற்றுப் பாதையை அவா் பயன்படுத்தியுள்ளாா். சிங்கின் இல்லத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.3 லட்சமும், அவா் பயன்படுத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
தப்பிச் சென்ற சிங்கின் கைப்பேசியை கண்காணித்ததில் அவா் உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது தாய்மாமா வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் வியாழக்கிழமை அவரை கைது செய்து இந்தூா் அழைத்து வந்தனா் என்றாா்.