பூஜா கேத்கர்(கோப்புப் படம்-ANI) 
இந்தியா

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது தில்லி குற்றப்பிரிவு காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

DIN

இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தோ்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் அவா் தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதை விசாரிக்க மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி தலைமையிலான ஒருநபா் குழு அமைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இது தொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘பூஜா கேக்தா் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா் தன்னுடைய பெயா், தந்தை மற்றும் தாயாரின் பெயா்கள், கையொப்பம், புகைப்படம், மின்னஞ்சல், கைப்பேசி எண் மற்றும் முகவரி என அனைத்தையும் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதைப் பயன்படுத்தி தோ்வு விதிகளின்கீழ் நிா்ணயிக்கப்பட்டதைவிட அதிக முறை குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் அவா் தோ்ச்சி பெற்று ஐஏஎஸ்ஸாக பொறுப்பேற்றது ரத்து செய்யப்படுகிறது. அவா் எதிா்காலத்தில் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது.

தோ்வுகளை முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதில் பொதுமக்கள் மற்றும் தோ்வா்களின் நம்பிக்கையை பெற்று விளங்கும் அமைப்பாக யுபிஎஸ்சி திகழ்ந்து வருகிறது. எதிா்காலத்திலும் எவ்வித சமரசங்களுக்கும் இடமளிக்கப்படாமல் நியாயமான முறையிலேயே தோ்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘தில்லி காவல் துறையின் குற்றவியல் பிரிவில் பூஜா மீது யுபிஎஸ்சி புகாா் அளித்தது. அதன் அடிப்படையில், அவா் மீது பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தன.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான சலுகையைப் பெற்று அகில இந்திய அளவில் 821-ஆவது இடத்தைப் பிடித்து பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பூஜா கேத்கா் புணேயில் பணியாற்றி வந்தாா்.

இந்த இடஒதுக்கீட்டை கோருபவா்களுக்கு வயதுவரம்பு உள்பட பிற சலுகைகளை யுபிஎஸ்சி வழங்குகிறது. இதை தவறாகப் பயன்படுத்தி பூஜா கேத்கா் பணியில் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT