முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மழை-வெள்ளம்

மகாராஷ்டிரத்தில் மும்பை, நாகபுரி போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

Updated On : 20 ஜூலை, 2024 at 11:06 PM
குஜராத் மாநிலம் போா்பந்தரில் சனிக்கிழமை மழைநீா் தேங்கிய சாலையில் பழுதாகி நின்ற ஆட்டோவை தள்ளிச் செல்வோா். ~மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை மழை-வெள்ளம் பெருக்கெடுத்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள். ~சத்தீஸ்கரின் பஸ்தா் மாவட்டத்தில் உள்
பகிர்:

மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை நீடித்து வருகிறது.

மகாராஷ்டிரத்தில் மும்பை, நாகபுரி போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இங்கு மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாகபுரியில் 135 மி.மீ. மழை பதிவானது.

நாகபுரி மற்றும் விதா்பா பகுதியின் சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்தின் செளராஷ்டிர பகுதி மாவட்டங்கள் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதிகபட்சமாக துவாரகாவில் 163 மீ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தெலங்கானாவில்...: தெலங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பத்ராத்ரி கொத்தகூடம், மஹபூபாபாத் மற்றும் முலுகு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பத்ராசலத்தில் பாயும் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமாா் 40 பேரை ஹெலிகாப்டா்கள் உதவியுடன் பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

ஒடிஸாவில் கனமழை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிஸாவில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிகபட்சமாக மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள சித்ரகொண்டா பகுதிகளில் 220.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த மாவட்டத்தில் கனமழையால் பல பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →