நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா? உச்சநீதிமன்றம் கேள்வி
பாட்னா உள்ளிட்ட 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உறுதியாகியுள்ளது - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, சனிக்கிழமைக்குள் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்டு வழக்கை திங்கள்கிழமைக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒத்திவைத்தார்.
அதன்படி, சனிக்கிழமை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக முடிவுகளை என்டிஏ வெளியிட்டதை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
அப்போது, மனுதாரர் தரப்பில், நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24ஆம் தேதி அனுப்பியுள்ளது, ஆனால், மே 3ஆம் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில்தான் வினாத்தாள் இருந்துள்ளது என்றும் வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையே, முக்கிய பிரச்னையை விவாதிக்குமாறு தெரிவித்த தலைமை நீதிபதி, பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தோ்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சா்ச்சையில் இத் தோ்வு சிக்கியது. தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தர பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சா்ச்சையானது.
இந்த முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும்; நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.