முகப்பு
இந்தியா

ஆந்திரம், பிகாருக்கு அதிக நிதி ஒதுக்கீடு: "காலம் ஒருநாள் மாறும்' - காங்கிரஸ் கருத்து

"மத்திய பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்றதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் இன்று குதூகலிக்கலாம்; ஆனால் இந்நிலை மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை'

Updated On : 24 ஜூலை, 2024 at 11:29 PM
பகிர்:

"மத்திய பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்றதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் இன்று குதூகலிக்கலாம்; ஆனால் இந்நிலை மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான குமாரி ஷெல்ஜா தெரிவித்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை மக்களவையில் புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கானது? இரு மாநிலங்களுக்கும் மட்டுமானதா அல்லது ஒட்டுமொத்த தேசமும் கவனத்தில் கொள்ளப்பட்டதா? பிகார், ஆந்திர பிரதேச மாநிலங்களைத் தவிர்த்து அல்லது பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களைத் தவிர்த்து வேறு எந்த மாநிலமும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

10-ஆவது மக்களவை காலம்தொட்டு எங்களுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்தவர் நிதீஷ் குமார். அவரும் சந்திரபாபு நாயுடுவும் அரசியல் அனுபவமிக்கவர்கள். நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கு அதிக சலுகை தரப்பட்டதாக இன்று தெரியலாம். அந்த இரு கட்சி தலைவர்களும் இன்று குதூகலிக்கலாம். ஆனால் இந்நிலை மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் ஏழை, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுவர்? ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. மக்கள் இந்த நிதிநிலை அறிக்கையை நம்ப மாட்டார்கள். தேர்தலில் பாஜக கூட்டணி 303 இடங்களில் இருந்து 240 இடங்களாகக் குறைந்ததற்கு இதுவே காரணம்.

அத்துடன் நிதிநிலை அறிக்கையில் தேர்தலைச் சந்திக்கவுள்ள ஜார்கண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விவசாயம் மிக நெருக்கடியில் இருக்கிறது; ஆனால், அதன்மீது எந்த அக்கறையும் இந்த அரசு காட்டியதாகத் தெரியவில்லை. விவசாயிகள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் முதலாளித்துவத்துக்கு ஆதரவளிக்கிறீர்கள். அனைத்து விவசாயிகளும் கடனில் உள்ளனர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொழிலாளர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், நீங்கள் அத்திட்டத்தை மறந்துவிட்டீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்திட்ட பயனாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை ரூ. 400 ஆக உயர்த்தி வழங்குவோம். மத்திய ஆரம்ப கல்வித் திட்டத்தின் தரமும் குறைந்து வருகிறது' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →