முகப்பு
இந்தியா

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் விடுவிப்பு: சி.டபிள்யு.எம்.ஏ. கூட்டத்தில் தகவல்

காவிரியில் நிகழ் நீர் ஆண்டு (ஜூன், ஜூலை) மாதங்களில் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை, 2024 at 10:51 PM
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

காவிரியில் நிகழ் நீர் ஆண்டு (ஜூன், ஜூலை) மாதங்களில் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

2024-25 நீர் ஆண்டு என்பது ஜூன் மாதத்தில் தொடங்கி 2025 மே மாதம் முடிவடைகிறது. இதன்படி ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களிலும் 40.43 டிஎம்சி க்கு பதிலாக 45 டிஎம்சி தண்ணீர் பிலுகுண்டுலுவில் இதுவரை பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவிரியில் தண்ணீரை பெறுவதில் ஆகஸ்ட் முக்கியமான மாதம் என்பதால், தமிழகம் சார்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு கோரப்பட்டது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில், தமிழகத்திற்கு நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை (ஜூலை 12 - ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை) காவிரியில் கர்நாடகம் விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பருவமழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் ஏராளமாகத் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், தமிழ அரசின் சார்பில் நீர்வளத் துறைச் செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் தொழில்நுட்பக் குழு பொறியாளர்கள் எல்.பட்டாபிராமன், ரம்யா, குளஞ்சிநாதன், நிஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு பிலுகுண்டுலுவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 45 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது வழங்கப்பட வேண்டிய அளவை விட 4 டிஎம்சி கூடுதலாகும். இதனால், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரப்படவில்லை. அதே சமயத்தில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி தண்ணீர் வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலையில், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட ஆணையம், வருகின்ற ஜூலை 30-ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் கர்நாடக அணைகளில் பெறப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய தண்ணீர் ஆகியவை குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →