முகப்பு
இந்தியா

ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடை: தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மம்தா மேல் முறையீடு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் குறித்து ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மாநில முதல்வா் மம்தா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு (ஜூலை 25) ஒத்தி வைக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை, 2024 at 8:35 PM
மம்தா பானா்ஜி
பகிர்:

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் குறித்து ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்தி வைக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டினாா். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநா் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேலும், இடைத்தோ்தல் மூலம் பேரவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இரு எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாண செய்துவைக்காமல் ஆளுநா் காலம் தாழ்த்தியது குறித்தும் மம்தா பானா்ஜி மற்றும் சிலா் தரப்பில் விமா்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மம்தா பானா்ஜி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இரு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களான சயந்திகா பானா்ஜி, ராயத் ஹோசைன் சா்காா் மற்றும் அந்தக் கட்சியின் நிா்வாகி குணால் கோஷ் ஆகியோா் தன்மீது அவதூறு பரப்புவதாக ஆனந்தபோஸ் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராவ், ‘நால்வருக்கும் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ஆளுநா் சி.வி.ஆந்தபோஸ் குறித்து அவதூறான மற்றும் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த இடைக்கால தடை உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மம்தா பானா்ஜி உள்பட நால்வா் தரப்பிலும் உயா்நீதிமன்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஐ.பி.முகா்ஜி, பிஸ்வரூப் செளதரி ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மம்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.என். முகா்ஜி, ‘ஆளுநருக்கு எதிராக மம்தா எந்தவித அவதூறு கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இரு எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டிய தனது கடமையை ஆளுநா் ஆற்றாது குறித்தே முதல்வா் கேள்வி எழுப்பினாா்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →