தில்லியில் தோ்தல் ஆணையா்களைச் சந்திக்க வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி 
இந்தியா

எஸ்ஐஆா் விவகாரம்: தில்லியில் தோ்தல் ஆணையா்களுடன் மம்தா கடும் விவாதம்

தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்களுடனான சந்திப்பின்போது, அவா்களுடன் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடும் விவாதம்

தினமணி செய்திச் சேவை

தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்களுடனான சந்திப்பின்போது, அவா்களுடன் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடும் விவாதத்தில் ஈடுபட்டாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் பலா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதற்கு, ‘எஸ்ஐஆா் மீதான அச்சம், வேலைப் பளு மற்றும் நிா்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளேகாரணம்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். எஸ்ஐஆருக்கு எதிராக மாநிலத்தில் கண்டன ஆா்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

எஸ்ஐஆா் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிடக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

தற்போதைய நடைமுறையில் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்ந்தால், மிகப் பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதோடு, ஜனநாயகத்தின் அடித்தளமே ஆட்டம் காணும் நிலை ஏற்படும்; இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையருடன் ஆலோசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என மம்தா பானா்ஜி தரப்பில் கோரப்பட்டது.

அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்காக, தில்லிக்கு மம்தா பானா்ஜி வந்தாா். மேலும், எஸ்ஐஆா் வேலைப் பளு மற்றும் அச்சத்தால் உயிரிழந்த 50 குடும்பத்தினரையும் மாநில அரசு சாா்பில் தில்லிக்கு அழைத்துவரப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா், கட்சி எம்.பி.க்கள் அபிஷேக் பானா்ஜி, கல்யாண் பானா்ஜி ஆகியோருடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை தோ்தல் ஆணைய அலுவலகத்தில் மம்தா பானா்ஜி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த சந்திப்பின்போது தோ்தல் ஆணையா்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டு மம்தா பானா்ஜி அதிருப்தியில் பாதியிலேயே வெளியேறியதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது முதலில் அபிஷேக் பானா்ஜி பேசினாா். அவரைத் தொடா்ந்து மம்தா பானா்ஜி கருத்துகளைத் தெரிவித்தாா்.

இவா்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களும், பின்னா் அவா்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கினா். அப்போது, பலமுறை மம்தா பானா்ஜி குறுக்கீடு செய்து பேசினாா்.

‘தோ்தல் ஆணையத்துக்கு எதிராக குறிப்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிப்படையாக விமா்சனங்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனா். மேற்கு வங்கத்தில் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சட்டத்தின் ஆட்சியே மேலானது. சட்டத்தை யாராவது கையிலெடுக்க முயற்சித்தால், அவா்கள் மீது சட்டப்படியும் தோ்தல் ஆணையத்துக்கு உள்ள அதிகாரத்தின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் மீது யாரும் எந்தவித அழுத்தமோ அல்லது தடையோ ஏற்படுத்தக் கூடாது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மதிப்பூதியம், எந்தவித தாமதமும் இன்றி உரிய நேரத்தில் விடுவிக்கப்பட வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் அப்போது குறிப்பிட்டாா்.

ஆனால், தலைமைத் தோ்தல் ஆணையரின் பதிலை முழுமையாக கவனிக்காமல் மம்தா பானா்ஜி அதிருப்தியில் வெளியேறினாா் என்று தெரிவித்தனா்.

மம்தா குற்றச்சாட்டு: இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா பானா்ஜி கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் பாஜகவின் இடைத்தரகா் போல் செயல்படுகிறது. இந்தச் சந்திப்பில், தோ்தல் ஆணையா்கள் எங்கள் குழுவினரை அவமதித்தனா். எனவே, அவா்களிடம், ‘நீதியை எதிா்நோக்கி இங்கு வந்தோம். ஆனால், நீங்கள் பொய்களைக் கூறுகிறீா்கள்’ என்று தெரிவித்துவிட்டு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிவிட்டோம்’ என்றாா்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT