பிகாரில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
பிகாரில் அதிகரித்து வரும் குற்றங்கள், அக்னிவீரர் திட்டம் தொடர்பான சர்ச்சைகள், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளுக்காக பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் ஸ்ரீ நிவாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டசபையை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியதுடன், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்துள்ளனர். இதில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் காயம் அடைந்ததுடன், அதன் தலைவர் ஸ்ரீ நிவாஸும் காயமடைந்தார்.
பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டதால் போலீஸார் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் விடியோக்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து, காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ’அதிகரிக்கும் குற்றங்கள், பணவீக்கம், வேலையின்மை மற்றும் நீட் வினாத்தாள் கசிவு ஆகியவற்றால் பிகார் மக்கள் சிரமப்பட்டாலும், அரசாங்கம் சிறப்பு மாநிலம் என்ற பெயரில் பொய் சொல்கிறது.
இந்தப் போராட்டத்தில் எங்கள் குரலை அடக்க தடியடி நடத்தப்பட்டுள்ளது. எங்கள் தொண்டர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாங்கள் பயப்படவில்லை. இந்த அநீதிக்கு எதிராக முழு பலத்துடன் தொடர்ந்து போராடுவோம்’ என்று பதிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.