செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் கோப்பு குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினர். அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் வழக்குரைஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களைக் காட்டும் கோப்பு இல்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதற்கு உங்கள் பதில் என்ன? குற்றஞ்சாட்டும் ரூ.67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களைக் காட்டும் கோப்பு எந்தக் கருவியில் உள்ளது என்பது குறித்து எங்களுக்கு நீங்கள் காட்ட வேண்டும்' என்று தெரிவித்தது.
வழக்குரைஞர் ஜோஹெப் ஹொசைன் கூறுகையில், "செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனையின்போது கிடைத்த பென் டிரைவ், ஹெச்பி பென் டிரைவ்' என்றார்.
அதற்கு நீதிபதி ஓகா, அந்தப் பென் டிரைவில் கேள்விக்குரிய கோப்பு இல்லை என்று மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி சுட்டிக்காட்டியிருப்பதைக் குறிப்பிட்டார். இதனால், தடய அறிவியல் ஆய்வகத்துக்கு பென் டிரைவ் உண்மையில் அனுப்பப்பட்டிருப்பதை அமலாக்கத் துறை காட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.