மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதைப் பரிசீலிக்க எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச காப்பீடு என்பது பாஜகவின் தோ்தல் வாக்குறுதியாகும். ஆனால், இத்திட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வ அளித்த பதிலில், ‘பிரதமா் ஜன ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வயது வரம்பு ஏதுமின்றி இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 12.34 குடும்பங்களைச் சோ்ந்த 55 கோடி போ் உள்ளனா். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டை நீட்டிப்பது தொடா்பாக பரிசீலிக்க வல்லுநா் குழு எதுவும் அமைக்கப்படவில்லை.
ஆயுஷ்மான் திட்டத்தில் பயனாளிகளுக்கு தரமான சேவை வழங்கும் வகையிலும், காப்பீடு கோரிக்கைகளை துரிதமாக பரிசீலிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.