கர்நாடகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து விட்டதாக பாஜக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், அங்கு நிலவி வரும் பிரச்னைகளுக்கு, எதிர்க்கட்சியான பாஜக எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் இருப்பதாக, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அரவிந்த் குற்றச்சாட்டில் கூறியதாவது, ``கர்நாடக மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநில அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி, மக்களின் குரலாக இருக்க வேண்டிய பாஜக, ஒரு எதிர்க்கட்சியாக செயல்படுவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
அரசின் ஊழல்கள், தவறான நிர்வாகம் மற்றும் தோல்விகளை அவையில் கூறுவதற்கு, பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு இருந்தபோதிலும், பாஜகவினர் அந்த வாய்ப்பை தவற விட்டனர்.
பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்றும், மாநில மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் பாஜகவினர் நினைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக பாஜக முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.
அவையில் பங்கேற்ற பாஜகவினர், வரும் நாட்களில் எவ்வாறு பெரிய போராட்டங்களில் ஈடுபட முடியும்? என்று தொண்டர்கள் நினைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.
ஒரு காலத்தில் அவையில் கர்ஜித்து, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் இருந்தபோதிலும் மக்களின் துயரங்களுக்கு போராடியது” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பெங்களூருவின் மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் அரவிந்த் லிம்பாவளி போட்டியிடுவதாகக் கோரியபோது பாஜக மறுத்திருந்தது. இருப்பினும், அவரது மனைவி மஞ்சுளா அரவிந்த் லிம்பாவளி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.