மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மாதத்திற்கு நான்கு நாள்களுக்குப் புத்தகப் பையின்றி பள்ளிகளுக்கு வரும் புதிய முயற்சியைக் கேரள அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
பள்ளிகளில் மாணவர்களின் புத்தகச்சுமை தொடர்ந்து அதிகரித்துவருவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருவதாக பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மாநிலத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை அதிகரிப்பது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பல புகார்கள் மற்றும் ஆலோசனைகள் குவிந்து வருகின்றன. புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு இரண்டு பகுதிகளாகப் பிரித்து மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், புத்தகப் பைகள் இன்னும் அதிக எடையுடன் இருப்பதாகவே புகார்கள் தொடர்கிறது.
இதையடுத்து, ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் பராமரிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இது தவிர, மாதத்திற்குக் குறைந்தது நான்கு நாள்களுக்கு, அரசுப் பள்ளிகளிலும் புத்தகப் பையில்லா நாள்கள் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை அரசு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.