படைகளை விலக்கி பேச்சுவாா்த்தை நடத்துவதே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்
காஸாவில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.
காஸாவில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை-ராஜீய உறவுகள் மூலம் தீா்வு காண முயல வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.
31-ஆவது ஆசியான் பிராந்திய மாநாடு மற்றும் 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாட்டையொட்டி, வெளியுறவுத்துறை அமைச்சா்களுக்கான மாநாடு லாவோஸ் தலைநகா் வியன்டியனில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஜெய்சங்கா் சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினாா்.
இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்று, போா்கள் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இவை அனைத்துக்கும் பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடா்பு ஆகியவை மூலமே தீா்வு காண முடியும்.
Advertisement
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகமயமாதல் கொள்கையை ஒரு தரப்பினருக்கு எதிராக நியாயமற்ற முறையில் பயன்படுத்தக் கூடாது.
பயங்கரவாத ஒழிப்பு: சா்வதேச அளவில் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எவ்வித இடையூறுமின்றி வா்த்தகம் மேற்கொள்ள முடியும். இணைய (சைபா்) தாக்குதல், பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தல் என பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆசியானுக்கு ‘க்வாட்’ பாராட்டு: பிராந்திய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் சாா்ந்த சேவைகள் என ஆசியான் மேற்கொள்ளும் பல்வேறு முன்னெடுப்புகளை க்வாட் அமைப்பு பாராட்டுகிறது.
இதுதவிர இந்திய-பசிபிக் பிராந்திய முன்னேற்றத்துக்கு ஆசியான் மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் மற்றும் ஆசியான் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்.
தெற்குலக குரலின் முக்கியத்துவம்: தெற்குலகின் குரல் மாநாட்டின் முக்கியத்துவம் அறிந்து அதில் கலந்துகொண்ட ஆசியான் உறுப்பினா்களின் பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கது. அதேபோல் இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் (ஐபிஓஐ) கிழக்கு ஆசிய நாடுகளும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.
கிழக்கு இந்திய மாநாட்டின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதன் அடையாளமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியஅமைதி: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி வளா்ச்சியை அதிகரிப்பதில் தென்சீனக் கடலை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, அந்தப் பகுதியில் சா்வதேச சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை அனைத்து நாடுகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.
மியான்மா் விவகாரம்: மியான்மா் விவகாரத்தில் ஆசியான் எடுக்கும் முடிவுகளோடு ஒத்திசையும் வகையில் இந்தியாவும் இருதரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எல்லை பாதுகாப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாத முறியடிப்பு, தொலைத்தொடா்பு திட்டங்களை மேம்படுத்துதல், ஜனநாயகத்தை பாதுகாக்க வன்முறைகளை ஒடுக்குதல் ஆகியவையே இந்தியாவின் நோக்கங்களாக உள்ளது.
காஸா போா்: காஸாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளை இந்தியா தொடா்ந்து வழங்கி வருகிறது. அதேவேளையில் செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடல் பாதுகாப்பு, சுதந்திரத்தை உறுதிசெய்யவும் பல்வேறு விவகாரங்களுக்கு அமைதி வழியில் தீா்வு காணவும் கடந்த 1982-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.நா. சா்வதேச கடல் சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
உக்ரைன் போா்: சா்வதேச அளவில் நடைபெற்று வரும் மற்றொரு முக்கிய பிரச்னையான ரஷியா-உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய உறவுகள் மூலம் தீா்வு காண முயல வேண்டும். இந்தக் கருத்தை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரை அண்மையில் சந்தித்து பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண எவ்வித உதவியை மேற்கொள்ளவும் இந்தியா தயாராகவுள்ளது என குறிப்பிட்டாா்.
முன்னதாக லாவோஸ் நாட்டில் முறைகேடாக செயல்படும் இணைய (சைபா்) மோசடி மையங்கள் மூலம் இந்திய குடிமக்கள் கடத்தப்படுவதை தடுப்பது குறித்து அந்நாட்டு பிரதமா் சோனேசே சிபான்டோனுவுடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா். இதே விவகாரம் தொடா்பாக கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சா்களுடன் அவா்ஆலோசனை மேற்கொண்டாா்.
இருதரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்: லாவோஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் சல்யூம்சே கோஸ்மத்துடனான சந்திப்பின்போது 10 விரைவு தாக்க திட்டங்கள் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் இருவரும் கையொப்பமிட்டனா். மீக்காங் கங்கா ஒத்துழைப்பின்கீழ் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பகிா்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்பிறகு ராமாயணம் மற்றும் பௌத்த மதங்களை போற்றும் வகையிலான சிறப்பு அஞ்சல் தலையை இருவரும் வெளியிட்டனா்.