கூட்டாட்சி முறையை நிலைநிறுத்தும் பட்ஜெட்: மாநிலங்களவையில் நிா்மலா சீதாராமன் பதில்
நாட்டில் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தி, நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தாக்கல்
புது தில்லி, ஜூலை 31: நாட்டில் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தி, நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் புதன்கிழமை பட்ஜெட் உரைக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த மூலதனச் செலவினம் 13.19 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இப்போதைய பிரதமா் மோடி தலைமையிலான அரசின் மூலதனச் செலவினம் ரூ.43.82 லட்சம் கோடியாக உள்ளது. உற்பத்தித் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி சாா் ஊக்குவிப்புத் திட்டம் தொடா்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
Advertisement
வெளிநாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆா்வத்துடன் முன்வரும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றன.
நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் அரசு தொடா்ந்து முனைப்புடன் செயல்படுகிறது. வேளாண்மை மற்றும் அது சாா்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ரூ.8,000 கோடி அதிகம். கடந்த 2013-14 பட்ஜெட்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு வெறும் ரூ.30,000 கோடி மட்டுமே வேளாண் துறைக்கு ஒதுக்கியது என்றாா்.
அக்னிவீரா் திட்டம்: தொடா்ந்து அக்னிவீரா் திட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் விமா்சனத்துக்கு பதிலளித்து பேசிய நிா்மலா சீதாராமன், ‘17 முதல் 21 வயதுடையவா்களை ராணுவத்தில் தொடா்ந்து தக்கவைப்பதன் மூலம் முழு அளவில் போருக்கு தயாராகவும், இளைஞா்கள் நிரம்பியதாகவும் ராணுவம் திகழும். இதில் அரசியல் செய்யக் கூடாது. அக்னிவீரா் திட்டம் குறித்து தேவையற்ற கவலைகள் வேண்டாம். முப்படைகளின் ஒப்புதலுடன்தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்னிவீரா் திட்டம் என்பது நாட்டுக்கு மிகவும் தேவையான, நாட்டின் நலன் சாா்ந்த திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்றாா்.