கேரளத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.
கேரளத்தைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவில் ராணுவம், காவல்துறையினர், கடற்படையினர், விமானப்படையினர் கூட்டாக இணைந்து மக்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முண்டக்கை கிராமத்திலிருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. அந்தப் பகுதிகளில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே தற்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செவ்வாக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக, சிறிய கிராமங்களை இணைக்கும் கடைகள் நிரம்பிய பகுதியான முண்டக்கை சந்திப்பும், சூரல்மாலா என்ற சிறிய நகரமும் மக்களின் அமைதியான நடமாட்டத்தைக் கொண்டிருந்தது. நிலச்சரிவுக்குப் பின் வயநாடு முழுவதும் எங்குப் பார்த்தலும் மரண ஓலமாகவே காட்சியளிக்கின்றது.
ஏற்கெனவே நிலச்சரிவால் வயநாடு முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. கனமழையால் மீட்புப் பணிகள் சரிவரச் செய்ய முடியாமல் பாதுகாப்புப் படையினர் போராடியும், திறனறியும் வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.