நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தன் மூலம் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
இந்தியாவில் 31.2 கோடி பெண்கள் உள்பட 64.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 68 ஆயிரம் கண்காணிப்புக் குழுக்கள், ஒன்றரை கோடி வாக்குச்சாவடி பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் குமார், நடந்து முடிநத் மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பாக முதன்முறையாக 100 சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
85 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத்திறனாளிகளும் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தேர்தல் பணிகளுக்கு 5 லட்சம் வாகனங்கள பயன்படுத்தப்பட்டன.
தேர்தல் மற்றும் பாதுகாப்புப்அதிகாரிகள் என ஒன்றரை கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.
நாட்டில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம். பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பங்கேற்று, தேர்தல் திருவிழாவை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த இடங்களிலும் அதிக வாக்குகள் பதிவானது. இந்தியாவில், நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் உலக சாதனை என்று தெரிவித்துள்ளார் ராஜீவ் குமார்.
பாரபட்சமின்றி, தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. சுமார் நான்கரை லட்சம் புகார்கள் வந்த நிலையில் 98 சதவீத புகார்கள் முடித்துவைக்கப்பட்டன.
கடந்த 2019 பொதுத் தேர்தலின்போது ரூ.3,500 கோடி மதிப்பிலான, பணம், நகை, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம், இலவச பொருள்கள், போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.