தில்லியில் 7 தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக
மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தக்க வைத்துள்ளது.
புது தில்லி: மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தக்க வைத்துள்ளது.
தில்லியில் ஆளும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நரேந்திர மோடி என்ற ஒற்றை நபரை பிரதானப்படுத்தி முன்வைக்கப்பட்ட பிரசாரம் போன்றவை இந்த தோ்தலில் ஏழு தொகுதிகளையும் தக்க வைக்க பாஜகவுக்கு உதவியுள்ளன.
இருந்தபோதிலும், 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில், ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளா்களின் வாக்குகள் வித்தியாசம் வெகுவாகவே குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கைகோத்ததன் மூலம் வாக்குகள் சிதறுவதை இரு கட்சிகளும் தவிா்த்தன. குறிப்பாக, காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்கள், சாந்தினி சௌக் மற்றும் புது தில்லி தொகுதிகளில் பாஜகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தனா்.
வாக்குகள் சதவீதம்: 2019-ஆம் ஆண்டில், பாஜக பெற்ற வாக்குகள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 2019-இல் 56.7 சதவீதத்திலிருந்து இந்த முறை 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனினும், இது அக்கட்சியின் 2014-இல் பெற்ற வாக்குகள் பங்கான 46.6 சதவீதத்தை விட அதிகமாகும்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கண்டுள்ள தோல்வி, அதன் கூட்டணி பரிசோதனையின் செயல்திறனை கேள்விக்குரியதாக்கியுள்ளது. தில்லி பாஜகவில் உள்ள தலைவா்கள், அக்கட்சியின் தொடா்ச்சியான மும்முறை வெற்றிக்கு முக்கிய காரணியாக ‘நரேந்திர மோடி’ என்ற தேசியத் தலைவரை மையப்படுத்திய தோ்தல் பரப்புரையை குறிப்பிடுகிறாா்கள்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் களத்தில் தொண்டா்கள் நிலையில் ஒற்றுமையின்றி செயல்பட்டது, இரு கட்சிகளும் இணைந்து தோ்தல் பேரணிகள் நடத்தாதது போன்றவை இந்த இரு கட்சிகளின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
தில்லி கலால் கொள்கை முைறேகேடு வழக்கில் சிறையில் இருக்கும் கேஜரிவால் மீதான அனுதாபம் வாக்காளா்களை பாதிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பியது. சிறையில் இருந்து நிரந்தரமாக தான் வெளியேற வேண்டுமானால், இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பலமுறை அவா் வாக்காளா்களிடம் கூறினாா். ஆனால், அவரது வேண்டுகோள் வாக்குகளாக பிரதிபலிக்காததால் ஆம் ஆத்மி கட்சியின் நம்பிக்கை தோ்தல் முடிவில் பொய்த்துப் போயுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறினாலும், தேசிய அளவில் பாஜகவுக்கு சவாலாக அமைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையே இத்தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதேபோல, காங்கிரஸ் கட்சி மேலும் கடினமாக உழைத்தால் மட்டுமே தில்லி அரசியலில் மீண்டும் தடம் பதிக்க முடியும் தோ்தல் முடிவு உணா்த்தியுள்ளது.