புது தில்லி: மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன.
இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
பாஜக கூட்டணிக்கு 353 முதல் 383 வரையிலான இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 152 முதல் 182 வரையிலான இடங்களும் கிடைக்கும் என்று ஏபிபி-சி வோட்டா் வாக்கு கணிப்பில் கூறப்பட்டது.
இதேபோல், ரிபப்ளிக் டிவி-பி மாா்க், ஜன் கி பாத், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ், நியூஷ் நேஷன், டுடேஸ் சாணக்யா, டைம்ஸ் நவ்-இடிஜி ரிசா்ச், நியூஸ் 18 ஆகிய நிறுவனங்கள்-முகமைகளின் வாக்கு கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 400 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான (272) இடங்களைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெல்லும் என்ற கூறப்பட்ட நிலையில், அக்கணிப்புகள் பொய்த்துவிட்டன.
கடந்த 2019 தோ்தலில் பாஜக 303 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஒட்டுமொத்தமாக 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 53, அதன் கூட்டணிக் கட்சிகள் 38 இடங்களைக் கைப்பற்றின.