முகப்பு
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஒரே நாடு ஒரே கோரிக்கை': அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஒரே நாடு ஒரே கோரிக்கை' என சமாஜ்வாஜி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஜூன், 2024 at 3:58 PM
பகிர்:

லக்னௌ: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஒரே நாடு ஒரே கோரிக்கை' என சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதேபோல் நீட் குளறுபடிகள் தொடா்பான பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்தநிலையில், நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 20 தோ்வா்கள் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில்,‘வினாத்தாள் கசிவு உறுதிசெய்யப்பட்டதையடுத்து சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைதும் செய்யப்பட்டுள்ளனா். எனவே, இதுதொடா்பாக சிபிஐ அல்லது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் குழு அல்லது தன்னிச்சையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

இத்தோ்வில் முழு மதிப்பெண்ணான 720-க்கு 620 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைவரின் கல்விப் பின்புலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவா்களிடம் தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற நீட்-யுஜி 2024 தோ்வை ரத்து செய்துவிட்டு முழுமையான மறுதோ்வு நடத்துமாறு தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தில்லி, பிகார், ஹரியாணாஷ தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் பேராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஒரே நாடு ஒரே கோரிக்கை' என சமாஜ்வாதி தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை உரக்கவும் தெளிவாகவும் எதிரொலித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →