வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார்.
ராகுல் காந்தி தனது எம்.பி. (வயநாடு) பொறுப்பை ராஜிநாமா செய்யவுள்ளதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறங்கவுள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, ''வயநாட்டில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வயநாட்டில் கடினமாக உழைத்து, என்னால் முடிந்த வரை மக்கள் பணியாற்றுவேன். ராகுல் காந்தி இல்லாததை வயநாட்டு மக்களை உணர விடமாட்டேன்.
ரேபரேலி, வயநாடு இரண்டு தொகுதிகளிலும் இருவரும் பிரதிநிதிகளாக நிற்போம். ரேபரேலி தொகுதியில் எனது சகோதரருக்கு நான் உதவுவேன்'' எனக் குறிப்பிட்டார்.
வயநாடு தொகுதியில் வேட்பாளராக நிற்பதன் மூலம் நேரடியாக தேர்தல் அரசியலில் பிரியங்கா காந்தி நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
''வயநாடு தொகுதிக்கும் எனக்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. இந்த முடிவு சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. வயநாடு மக்களுக்காக தொடர்ந்து உறுதுணையாக நிற்பேன். வயநாடு தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற பாடுபடுவேன்.
வயநாடு தொகுதியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார். தேர்தல் போரில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.
தங்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் உள்ளதாக வயநாடு மக்கள் நினைக்க வேண்டும். ஒன்று நான். மற்றொருவர் எனது சகோதரி. வயநாடு மக்களுக்காக என் கதவுகள் என்றுமே திறந்திருக்கும்.
கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு, அன்பை மறக்கமாட்டேன். நானாக இருந்தாலும் சரி, எனது சகோதரியாக இருந்தாலும் சரி, வயநாடு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்'' எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.