கிறிஸ்தவர்களை காங்கிரஸினர் அவமதிப்பதாக, பாஜகவினரின் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸை சந்தித்து, இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து, கேரள காங்கிரஸினர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அப்பதிவில், "இறுதியாக, போப்பிற்கு கடவுளைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது” என்று பதிவிட்டிருந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான ஜார்ஜ் குரியன், “பிரதமர் மோடியை இறைவன் இயேசுவுடன் ஒப்பிடும் காங்கிரஸின் இந்த எக்ஸ் பதிவு முற்றிலும் தேவையற்றது; இயேசுவை மதிக்கும் கிறிஸ்தவ சமூகத்தை அவமதிப்பதாகும். காங்கிரஸ் இந்த செயல் வெட்கக்கேடானது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பாஜக தலைவரான கே. சுரேந்திரன், ”நக்சல்களால் நடத்தப்படும் கேரள காங்கிரஸின் எக்ஸ் பக்கமானது, தேசியவாத தலைவர்களுக்கு எதிராக இழிவான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இப்போது, அவர்கள் மரியாதைக்குரிய போப்பையும் கிறிஸ்தவ சமூகத்தையும் கேலி செய்வதற்கும் கூட துணிந்து விட்டனர். கேள்வி என்னவென்றால், இத்தகைய செயல்களினை ராகுல் காந்தி மற்றும் கார்கே இருவரும் ஆதரிக்கின்றனரா?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேரள காங்கிரஸினர் அப்பதிவை நீக்கி விட்டனர். மேலும், நீக்கியதற்கான காரணத்தினையும் பதிவிட்டுள்ளனர். அப்பதிவில் தெரிவித்ததாவது, ”காங்கிரஸ் எந்தவொரு மதத்தினையும், மதக்குருக்களையும் மற்றும் சிலைகளையும் அவமதிப்பதில்லை. காங்கிரஸ் என்பது அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்லும் இயக்கம்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், போப்பை கடவுளைப் போல கருதுகின்றனர். போப்பை அவமதிக்கும் சிந்தனையைக் கூட எந்த காங்கிரஸினரும் சிந்திக்கக் கூட மாட்டார்கள். இருப்பினும், தன்னை ’கடவுள்’ என்று கூறிக்கொண்டு, இந்த நாட்டின் நம்பிக்கையாளர்களை அவமதிக்கும் நரேந்திர மோடியை கேலி செய்வதில் காங்கிரஸுக்கு எந்த தயக்கமும் இல்லை.
இந்த பதிவு கிறிஸ்தவர்களுக்கு ஏதேனும் உணர்ச்சி அல்லது உளவியல் துயரத்தை ஏற்படுத்தியிருந்தால் நாங்கள் தடையின்றி மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.