ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சுல்தான்பூா்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணையை, உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கடந்த 7-ஆம் தேதி இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் வேறு காரணத்துக்காக ஒத்திவைக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி என சா்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தாா். இதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா்.
இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது நிகழ்ந்த போலி என்கவுன்ட்டா் வழக்கு தொடா்பாக ராகுல் அவா் மீது அவதூறாகக் குற்றம்சாட்டினாா். இந்த போலி என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமித் ஷாவை ஏற்கெனவே விடுவித்துவிட்டது.